தேர்தலையொட்டி நடந்த பல்வேறு சோதனைகளில் சுமார் ரூ.3500 கோடி பறிமுதல்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடந்த பல்வேறு சோதனைகளில் சுமார் 3500 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் 10ஆம் தேதி முதல், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதைத்தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக, நாடுமுழுவதும் 3 ஆயிரத்து 447 கோடியே 74 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக,839 கோடியே 26 லட்சம் ரூபாய் ரொக்கப்பணமும், 293 கோடியே 60 லட்சம் மதிப்பிலான மதுபானங்களும், 1269 கோடியே 63 லட்சம் மதிப்புக்கு போதை பொருட்களும், 986 கோடியே 73 லட்சம் மதிப்புக்கு தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், ரூ.58 கோடியே 53 லட்சம் மதிப்புக்கு வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கான பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களில் குறிப்பிட்ட அளவு, சம்பந்தப்பட்டவர்களால் உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டு திரும்ப பெறப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version