சபரிமலை விவகாரத்தில் 67 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் கேரள காவல்துறை தெரிவித்துள்ளது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் சில பெண்களை கேரள அரசு சபரிமலை கோவிலுக்குள் அழைத்து சென்றது. சபரிமலை விவகாரத்தில் கேரள அரசினை கண்டித்து கேரளாவில் வன்முறை போராட்டங்கள் நடைபெற்றன.
இதனிடையே கேரள போலீசார் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து உள்ளனர். அதில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி முதல் கடந்த 4-ந் தேதி வரை 67 ஆயிரத்து 94 பேர் மீது 2 ஆயிரத்து 012 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக சபரிமலையில் 51 இளம்பெண்கள் தரிசனம் செய்ததாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல் அளித்திருந்தது. இதில் ஏராளமான முரண்பாடுகள் இருந்த நிலையில் வழக்கு குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே மகர விளக்கு பூஜை நிறைவு பெறுவதையொட்டி இன்று மாலை சபரிமலை நடை சாத்தப்படுகிறது.