20 ஓவர் மகளிர் உலக கோப்பை : தாய்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

7வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் தாய்லாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மகளிருக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. அதில் இன்று நடைபெற்ற  முதல் போட்டியில் இங்கிலாந்து  –  தாய்லாந்து அணிகள் மோதியது,  டாஸ் வென்ற தாய்லாந்து அணி  முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இங்கிலாந்தின் எமி எலன் ஜோன்ஸ்,  டேனியல் வயாட் இருவருமே ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகினர். அந்த அணி 7 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து ஜோடி சேர்ந்த நடாலி ஷீவர்  மற்றும் கேப்டன் ஹேதர் நைட் இருவரும் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் சேர்ந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

கேப்டன் ஹேதர் நைட் 66 பந்துகளில் 13 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் விளாசி 108 ரன்கள் அடித்தார். சர்வதேச டி 20 போட்டியில் ஹேதர் நைட் அடித்த முதல் சதம் இதுவாகும்.

இதேபோல் சர்வதேச டி 20 போட்டியில் 1,000 ரன்களை கடந்த 7 ஆவது இங்கிலாந்து வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார்

மேலும் 2020 உலகக்கோப்பை தொடரில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவாகும். இதேபோல் மற்றொரு வீராங்கனை நடாலி ஷீவர் சிறப்பாக விளையாடி 52 பந்துகளில் 8 பவுண்டரிகளை விளாசி 59 ரன்கள் அடித்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை  மட்டுமே இழந்து 176 ரன்கள் அடித்தது.

 பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் விளையாடிய தாய்லாந்து அணி 20 ஓவரில் 7  விக்கெட்டை இழந்து 78 ரன்கள் மட்டுமே எடுத்தது, இதனால் இங்கிலாந்து அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சதம் விளாசிய இங்கிலாந்து கேப்டன் ஹேதர் நைட் ஆட்ட நாயகி விருதை பெற்றார்

Exit mobile version