தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள சிறப்பு பேருந்துகளின் மூலமாக, இது வரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பத்திரமாக பயணம் செய்திருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
வரும் 27ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, வெளியூர் செல்வதற்காக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகளின் இயக்கத்தை , போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதால், பொது மக்கள் சிரமமின்றி வெளியூர்களுக்கு பயணம் செய்கின்றனர் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அதிக கட்டணம் வசூலித்த 6 ஆம்னி பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.