விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்தவர் நமது முதலமைச்சர் என்பதால்தான், 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ததாக அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு, ஆயிரத்து 635 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். அப்போது சிறப்புரையாற்றிய அமைச்சர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிராமத்தில் பிறந்தவர் என்பதால் மக்கள் பிரச்னைகளை நன்கு உணர்ந்துள்ளதாகவும், மற்றவர்கள் சொல்லி விளக்க வேண்டிய தேவை இருப்பதில்லை எனவும் கூறினார். அதனால்தான் விவசாயிகள் கேட்காதபோதே, அவர்களின் சிரமத்தை உணர்ந்து 12 ஆயிரத்து 110 கோடி பயிர்க்கடனை தள்ளுபடி செய்துள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.