ஆஸ்கார் நாயகனுக்கு இன்று 52 வது பிறந்த நாள்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 52 வது பிறந்த நாளை கொண்டாடுவதையொட்டி அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இசைத்துறையில் சர்வதேச அளவில் வெற்றி பெற்றவர் ஏ.ஆர் ரகுமான். இந்திய திரையிசை பாடல்களில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் ஏ.ஆர்.ரகுமான், 1967-ம் வருடம் சென்னையில் பிறந்தார்.

இவரின் தந்தை சேகர் மலையாள திரைப்படத் துறையில் இசையமைப்பாளராக பணியாற்றியவர். சிறுவயதிலேயே தனது தந்தையை இழந்த ரகுமான் அவரின் இசைக்கருவிகளை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தில் இசைக் கருவிகளை வாசிக்க கற்றுக் கொண்டார்.

தனது 11-வது வயதில் இசைஞானி இளையராஜாவின் இசைக்குழுவில் சேர்ந்தார். பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசை ஜாம்பவான்களிடமும் அவர் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாச்சிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்ற ரகுமான், மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருதை வென்று நாட்டையே திரும்பி பார்க்க வைத்தார்.

ரோஜா பாடல்

ரோஜாவை தொடர்ந்து இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளிலும் இசையமைக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தனது புத்தம் புதிய இசையால் இளைய தலைமுறையை ஏ.ஆர். ரகுமான் வெகுவாக கவர்ந்தார். தமிழ், இந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் இசையமைத்த ஏ.ஆர் ரகுமான், அனைத்து தரப்பு மக்களையும் தன் இசையால் கட்டிப்போட்டார்.

The Mozart Of Madras

இசைப்புயல், The Mozart Of Madras ஆகிய புனைப் பெயர்களால் அழைக்கப்பட்ட இவரின் இசைத்தொகுப்புகள் உலக அளவில் அதிகளவில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன. சிறந்த இசைக்காக 6 முறை தேசிய விருது வென்ற ரகுமான், கடந்த 2009 ஆம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதை வென்று சாதனை படைத்தார்.
(ஸ்லம்டாக் மில்லினியர்)

மேலும், கோல்டன் குளோப் விருது, பாப்டா விருது, தேசிய திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். 52 வது பிறந்த நாளை கொண்டாடும் ஏ.ஆர் .ரகுமானுக்கு பிரபலங்கள் தங்கலது வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாகம் நேரிலும் தெரிவித்து வருகின்றனர்.அனைத்து வயது இசை ரசிகர்களையும் தன்பால் ஈர்த்த ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமானுக்கு நியூஸ் ஜெ சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Exit mobile version