அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, கோலாகலமாக நடைபெற்றது. சிறந்த நடிகருக்கான விருதை ஜோக்கர் பட நாயகன் ஜாக்கின் ஃபோனிக்ஸ் தட்டிச் சென்றார். பல்வேறு பிரிவுகளில் விருதுகளை தட்டிச் சென்றவர்கள் குறித்து செய்தி தொகுப்பு
உலகளவில் சிறந்த திரைப்படங்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் ஆண்டு தோறும் ஆஸ்கர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த நிலையில், 92வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. சிவப்புக் கம்பள வரவேற்புடன் நடந்த இந்த நிகழ்ச்சியில், உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான திரை நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் தொடங்கிய ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், தொடர்ந்து 2-வது முறையாக தொகுப்பாளர் இல்லாமல் நடத்தப்பட்டது. இதில், சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் தட்டிச்சென்றார். சிறந்த துணை நடிர்களுக்கான பரிந்துரை பட்டியலில் 5 நடிகர்கள் இருந்த நிலையில், ONCE UPON A TIME IN HOLLYWOOD திரைப்படத்திற்காக, பிராட் பிட்டுக்கு விருது வழங்கப்பட்டது. 1987-ம் ஆண்டு முதல் ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் பிராட் பிட், முதல்முறையாக விருதை பெற்று தனது ஆஸ்கர் தாகத்தை தீர்த்துக் கொண்டார்.
இதேபோல், சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருது TOY STORY 4 படத்துக்கும், சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான விருது HAIR LOVE படத்துக்கும் வழங்கப்பட்டது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை பாரசைட் என்ற படத்திற்காக பாங் ஜூன் ஹோ பெற்றுக் கொண்டார். பேராசை பிடித்த பணக்கார குடும்பத்தை சேர்ந்த ஒருவனுக்கும் ஆதரவற்ற ஒருவனுக்கும் இடையே நிகழும் உறவை கதைக் களமாக கொண்டு மர்ம திகில் திரைப்படமாக உருவான பாரசைட் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பாராசைட் படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றது. அதனை இயக்கிய பாங் ஜூன் ஹோ, சிறந்த இயக்குனருக்கான விருதையும் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான விருதை ஹேன் ஜின் ஒன்னுடன் இணைந்து பெற்றுக்கொண்டார். அதேபோல் சிறந்த வெளிநாட்டு திரைப்படமாகவும் பாராசைட் தேர்வு செய்யப்பட்டதன் மூலம் 4 ஆஸ்கர் விருதுகளை பாரசைட் அள்ளியது. அதேபோல், சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை “ஜோஜோ ராபிட்“ படத்துக்காக டெய்கா வெய்ட்டிடி பெற்றார்.
இதனையடுத்து அனைவரும் எதிர்பார்த்தது போலவே சிறந்த நடிகருக்கான விருதை ஜோக்கர் படத்தின் நாயகன் ஜாக்கின் ஃபோனிக்ஸ் தட்டிச் சென்றார். அப்போது ஆஸ்கர் மேடையில் பேசிய அவர், தேவையான அன்பையும், அமைதியையும் மீட்டெடுக்க ஓடிக்கொண்டிரு என்று தனது சகோதரன் கூறிய வரிகளை குறிப்பிட்டார். அதேபோல், சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது ஜூடி படத்தில் தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த ரெனி ஸெல்வேகருக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த ஒலிக்கலவை, ஒளிப்பதிவு, விஷூவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட பிரிவுகளுக்கான விருதுகளை “1917“ திரைப்படம் தட்டிச்சென்றது. சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான ஆஸ்கர் விருதை பாம்ஷெல் படத்திற்கு வழங்கபட்டது.
சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருது ஜோக்கர் படத்திற்கு இசையமைத்த பெண் இசையப்பாளர் ஹில்டர் குட்னட்டொட்டீர்க்கு வழங்கப்பட்டது. சிறந்த பாடலுக்கான விருதை த ராக்கெட் மேன் படத்தில் இடம்பெற்ற im gonna love me again என்ற பாடலுக்கு இசையமைத்த எல்டன் ஜான் மற்றும் பெர்னி டுபின் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த பெரும்பாலான படங்கள் இந்தாண்டு ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றது சினிமா ரசிகர்களை உற்சாகமடைய அடைய செய்துள்ளது.