அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும் என்ற ஆதரவற்ற குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர். இந்நிலையில் கிரிவலப்பாதையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அரசு சார்பில் செயல்படும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திலும் ஆய்வு மேற்கொண்ட அவரிடம், தாங்களும் அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும் என்று குழந்தைகள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து உடனடியாக கோவில் நிர்வாகத்திடம் சிறப்பு அனுமதி பெற்ற மாவட்ட ஆட்சியர், குழந்தைகளை சிறப்பு வாகனத்தில் அழைத்துச் சென்றார். தங்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியருக்கு குழந்தைகள் நன்றி தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.