கனமழையால் பள்ளிக் கட்டிடங்கள் சேதம் அடைந்திருந்தால், அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அரசுப்பள்ளி வளாகத்தில், புதிய சமையலறை கட்டிடம் கட்டப்பட்ட பின்பும், பழுதடைந்த பழைய சமையலறை கட்டடம் அகற்றப்படாமல் இருந்துள்ளதாகவும், கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக, இக்கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில், மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் தப்பி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும், தங்கள் மாவட்டத்தில் உள்ள பள்ளியில், ஆபத்தான கட்டடங்கள் இடிக்கப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் வகுப்பறை, சுற்றுச்சுவர், கழிவறைகளைச் சுற்றி தண்ணீர் தேங்கி இருந்தால், அவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.