உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை அக்டோபர் மாதம் 4ம் தேதிக்குள் வெளியிட, மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 2016 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்நிலையில் வார்டுகள் மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேர்தல் நடைபெறுவது தொடர்ந்து தாமதமாகி வந்தது. இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்திருந்தார். மேலும் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் அலுவலர்களை நியமிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயார் செய்ய மாநிலத் தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வாக்காளர் பட்டியலை அக்டோபர் 4ம் தேதிக்குள் வெளியிட உத்தரவிட்டுள்ள மாநிலத் தேர்தல் ஆணையம், 5ம் தேதிக்குள் மாநிலத் தலைமையகத்திற்கு அனுப்பவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.