தமிழகம் முழுவதும் உள்ள முதியோர் காப்பகங்களில் சமூக நலத்துறை செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையிலுள்ள தனியார் முதியோர் இல்லம் குறித்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் சமூக நலத்துறை செயலாளர் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். அதில், அவர் முதியோர் இல்லங்களை பராமரிப்பது குறித்து 2016-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை கண்டிப்புடன் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், மத்திய மாநில அரசுகளின் மானியத்தின் மூலம் 144 அரசு முதியோர் இல்லங்கள் செயல்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் பதிவு செய்யப்பட்ட தனியார் இல்லங்கள் 133 உள்ளதாகவும், மூத்த குடிமக்களின் குறைகளை கேட்பதற்காக 81 தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதையடுத்து பேசிய நீதிபதிகள் அமர்வு அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்களை மாவட்ட ஆட்சியர்களும், கோவையில் உள்ள முதியோர் இல்லங்களை சமூக நலத்துறை செயலாளரும் நேரில் ஆய்வு செய்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.