பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 2008ல் ரயில்வே காவல் துறையில் பணியாற்றிய வினோத் என்பவர், பெண் பயணி ஒருவரிடம் முறையற்ற வகையில் பேசியதாக, சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், 2015ல் வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த உத்தரவை தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் உறுதி செய்தார்.
இதனை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வினோத் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்தது. இருப்பினும், ரயில்களில் பயணிக்கும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என தெற்கு ரயில்வேயின் பொது மேலாளருக்கு உத்தரவிட்டது.
மேலும், ரயில்களில் பணிபுரியும் பாதுகாவலர்களுக்கு, பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும் என்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே விரைவாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.