பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இன்று தொடங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒளிபரப்பினை துவக்கி வைத்தனர்.
நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. வண்ணமிக விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா திருவுருப்படங்களுக்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
குத்துவிளக்கை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்த அவர்கள், தங்களது திருக்கரங்களால் நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் அதிகாரபூர்வ ஒளிபரப்பை துவக்கி வைத்தனர்.
அமைச்சர்கள், அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அ.தி.மு.க.வின் கட்சி நிகழ்ச்சிகள், ஆட்சி தொடர்பான செய்திகளை வெளியிட, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, கடந்த பிப்ரவரி மாதம் நமது புரட்சித் தலைவி அம்மா பத்திரிகை தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நியூஸ் ஜெ தொலைக்காட்சியை தொடங்குவதற்கான பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன.
இதன் ஒருபகுதியாக நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் லோகோ மற்றும் இணைய தளம் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.