செய்திகளை முந்தித்தருவது மட்டுமின்றி, உண்மைத் தன்மை மாறாமல் மேம்படுத்தித் தர வேண்டும் என்பதை மனதில் கொண்டு செய்தியாளர்கள் செயல்பட வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
நியூஸ் ஜெ. தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கி வைத்த துணை முதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழக மக்கள் ஏற்றம் பெற சிறந்த திட்டங்களை கொண்டு வந்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்று அவர் புகழாரம் சூட்டினார்.
தகவல் தொடர்பின் சிறப்பு குறித்த பாரதிதாசனின் வரிகளை குறிப்பிட்ட அவர், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் 95 சதவீத மக்கள் தொலைக்காட்சியை பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
செய்திகளை முந்தித்தர வேண்டிய அவசியம் மட்டுமின்றி, செய்திகளின் உண்மைத் தன்மை மாறாமல் மேம்படுத்தி தர வேண்டிய கட்டாயம் உள்ளது என்பதை மனதில் கொண்டு, பாகுபாடு காட்டாமல் நடுநிலையோடு செய்திகளை அளிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
ஜெ. என்றால் ஜெயம், ஜெயம் என்றால் வெற்றி என்று குறிப்பிட்ட துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதல் எழுத்தை கொண்டு துவங்கும் நியூஸ் ஜெ. தொலைக்காட்சி, வீரநடை பயில ஜெயலலிதாவின் ஆன்மா வழிகாட்டும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.