எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை வழங்காமல் மத்திய அரசு தாமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டெல்லி, மேற்குவங்கம், பஞ்சாப், ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த நிதி அமைச்சர்கள் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களுக்கு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், அனைத்து மாநிலங்களும் கடுமையாக நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு 2 ஆயிரத்து 355 கோடி ரூபாயும், மேற்குவங்கத்திற்கு ஆயிரத்து 500 கோடி ரூபாயும் மத்திய அரசு தர வேண்டி உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. பஞ்சாபிற்கு 4 ஆயிரத்து 100 கோடி ரூபாயும், கேரளாவுக்கு ஆயிரத்து 600 கோடி ரூபாயும் வழங்க வேண்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று அந்தந்த மாநிலங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.