கூட்டுறவு சங்க சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து எதிர்க்காட்சி தலைவர் தலைமையில் அண்ணா திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை, ஆளுநர் உரைக்குப் பிறகு இரண்டாவது நாளாக கூடியது. அப்போது நடந்த கேள்வி நேரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தங்களது கேள்விகளை அண்ணா திமுக உறுப்பினர்கள், அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பினர்.
அதன்பின் திமுக அமைச்சர் ஐ பெரியசாமி பேசும்போது கூட்டுறவு சங்க சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது ஆரம்ப நிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அண்ணா திமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு, சிறப்பாக நடைபெற்று வரும் கூட்டுறவு சங்கங்களின் ஆயுள் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கிறது என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்றும், அத்திட்டம் 5 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளின் தலைமையில்தான் கண்காணிக்கப்பட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் குறித்த அதிமுகவினரின் கேள்விக்கு முறையான பதிலளிக்க முடியாத திமுக அரசு, முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது அவதூறாக பொய் குற்றச்சாட்டை தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அம்மா பெயரில் உள்ள திட்டத்தை எல்லாம் காழ்ப்புணர்ச்சியுடன் மூடி வரும் திமுக அரசு, பொங்கல் பரிசு பொருட்களை தரமற்று வழங்கியுள்ளதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் தரமற்ற பொங்கல் பரிசுடன் மக்கள் எப்படியெல்லாம் அவதிப்படுகிறார்கள் என்று வீடியோ ஆதாரத்துடன் விளக்கினார்.
மேலும், பொங்கல் தொகுப்புக்கு பொருட்கள் வாங்கியதிலும், அண்டை மாநிலங்களில் இருந்து பொருட்களை வாங்கி கமிஷன் அடிக்கவே குறியாக இருந்ததாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார்.
தமிழ்நாட்டில் ஜெட் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், திமுக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருப்பது ஏன் என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.