எதிர்க்கட்சிகள் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு: மீறினால் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் அனுமதி

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ள பேரணிக்கு, காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தினால், சட்டப்பூர்வமாக உரிய நடவடிக்கை எடுக்க, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் இன்று, பேரணி நடத்த இருப்பதாக அறிவித்திருந்த நிலையில்,இந்த பேரணியால் சட்டம் ஒழுங்கு சீர்கெட வாய்ப்புள்ளதால், பேரணிக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் நேற்று அவசர வழக்காக நீதிபதி வைத்தியநாதன், பி.டி ஆஷா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், முறையான அனுமதியின்றி பேரணி நடத்துவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது எனவும்,பேரணியால் சட்டம்-ஒழுங்கு  பிரச்சனை ஏற்படும் எனவும் தெரிவித்தனர். விசாரணைக்கு பிறகு, உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள்,பேரணியின்போது நிபந்தனையை பின்பற்றி நடப்பீர்களா என்ற காவல்துறையின் கேள்விக்கு ” பொருந்தாது” என மழுப்பலான பதில் அளித்துள்ளதை சுட்டிக் காட்டினர். தொடர்ந்து, தடையை மீறி பேரணி நடக்கும் பட்சத்தில் அதை முழுவதுமாக வீடியோ பதிவு செய்யுமாறு  காவல்துறைக்கு உத்தரவிட்ட  நீதிபதிகள், தடையை மீறி பேரணி நடைபெற்றால் காவல்துறை சட்டபூர்வ நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டனர். பேரணியில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவித்துள்ள அரசியல் கட்சிகள் மற்றும் காவல்துறை சார்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 30 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Exit mobile version