12 எம்பிக்கள் இடைநீக்கத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் பேரணி

12 எம்.பி.க்கள் இடைநீக்க உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து விஜய் சவுக் வரை, எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியாக சென்றனர். இந்த விவகாரத்தில் நாட்டு மக்களின் குரல் நசுக்கப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 12ஆம் நாளான இன்று மாநிலங்களவை கூடியதும், 12 எம்.பி.க்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு, நாடாளுமன்ற அவையை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபடுவதால் எதுவும் நடக்க போவதில்லை என தெரிவித்தார்.

எனவே, உறுப்பினர்கள் அனைவரும் அமைதிக் காக்க வேண்டும் என்றும் அவையின் கண்ணியத்தை அனைவரும் காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஆனால், இதை ஏற்க மறுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 12 எம்பிக்கள் இடைநீக்கத்தை கண்டித்து காங்கிரஸ், சிவசேனா, இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியாக சென்றனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையில் இருந்து விஜய் சவுக் வரை முழக்கங்கள் எழுப்பியபடி எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியில் பங்கேற்றனர்.

இந்த பேரணியில் காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேரணி தொடங்குவதற்கு முன்பு பேசிய ராகுல் காந்தி, 12 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதன் மூலம் நாட்டு மக்களின் குரல் நசுக்கப்படுவதாக சாடினார்.

மாநிலங்களவையில் எம்பிக்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை எழுப்புவதற்கு கூட அனுமதி கொடுப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர் அமளிக்கு மத்தியில் விவாதமின்றி வரிசையாக மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதாக குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, இது நாடாளுமன்றத்தை நடத்தும் முறையில்லை என்றும் ஜனநாயகத்தின் துரதிருஷ்டவசமான படுகொலை என்றும் தெரிவித்தார்.

Exit mobile version