புதுச்சேரி சட்டசபையில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சபைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று காலை அவை தொடங்கியதும் நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி 2019-20 நிதி ஆண்டிற்கான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள 8 ஆயிரத்து 425 கோடி ரூபாய்க்கான பட்ஜெட் உரையைப் படித்தார்.
அப்போது என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், தற்போது தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் வெற்று பட்ஜெட் எனவும், கடந்த 3 ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவித்த எந்தத் திட்டத்தையும் அரசு நிறைவேற்றவில்லை எனவும் கூறி சபாநாயகர் முன்பு தரையில் அமர்ந்து முழக்கமிட்டனர்.
இதனைத் தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினரை அவையில் இருந்து வெளியேற்ற சபைக்காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சபைக் காவலர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றினர். இதனால் சட்டப்பேரவை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏறபட்டது.