புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க பாஜக நியமன எம்எல்ஏக்கள் 3 பேருக்கு அழைப்பு

புதுச்சேரி சட்டப்பேரவையில் முழுமையான பட்ஜெட் கடந்த 2ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமலே, சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை புதுச்சேரி அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மாநில அரசின் மற்ற திட்டங்களையும் செயல்படுத்த முடியாமல், புதுச்சேரி அரசு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பட்ஜெட் சட்ட வரைவுக்கு உள்நோக்கம் காரணமாக, ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதாக முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி இருந்தார். புதுச்சேரி பேரவைக்கு 3 நியமன எம்.எல்.ஏக்கள் வரும்போது, நிதி மசோதாவிற்கான ஒப்புதல் தானாக கிடைக்கும் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, பதிலளிக்கும் விதமாக பேசியிருந்தார். இதனால், புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில், நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெற, புதுச்சேரி சட்டப்பேரவை இன்று கூடுகிறது.  இன்றைய கூட்டத்தில், நிதி மசோதாவுக்கு இன்று ஒப்புதல் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் கலந்துகொள்ள பாஜகவை சேர்ந்த நியமன எம்எல்ஏக்கள் 3 பேருக்கு, சட்டப்பேரவைச் செயலாளர் வின்சென்ட் ராயர் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version