கேரள சட்டப்பேரவையில், ஆளுநர் ஆரிஃப் முகம்மது கானை கண்டித்து, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கேரள சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
முன்னதாக, ஆளுநர் உரையில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த தகவல்கள் இடம்பெறாது என ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்ற ஆளுநர் ஆரிஃப் முகம்மது அவைக்கு வந்தார்.
முதலமைச்சர் பினராயி விஜயனுடன் வருகை தந்த ஆளுநரை முற்றுகையிட்டு ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர். ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என அவர்கள் முழக்கம் எழுப்பினர். இதனால், சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.