அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நாடாளுமன்ற பெண் உறுப்பினருக்கு எதிராக இனவெறி கருத்துகளை கூறி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், நாட்டின் குடியேற்ற கொள்கையில் கடுமையான போக்கை கையாண்டு வருவதாகவும், இது தொடர்பாக இனநீதியிலான கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. ட்ரம்பின் குடியேற்ற கொள்கையை அந்நாட்டின் 4 நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், இனவெறி தொடர்பான கருத்துக்கள் தெரிவித்ததாக சர்ச்சை எழுந்தது. அந்த 4 உறுப்பினர்களின் பெயரை குறிப்பிடாமல், அவர்களின் பூர்வீக தேசத்திற்கே செல்லுமாறும் கூறியதை அடுத்து அந்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது. டிரம்பின் இந்த இனவெறி கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் வலுத்துவரும் நிலையில், சக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் டிரம்பை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், எதிர்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் ட்ரம்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.