நெல் கொள்முதலை துரிதப்படுத்த ஆளுங்கட்சிக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தமிழ்நாட்டில், மூடப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து கொள்முதல் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டுமென எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல் கொள்முதல் நிலையங்களில் ஆளும் கட்சியினரின் தலையீடு குறித்து பலமுறை அரசுக்கு சுட்டிகாட்டியதை, நினைவு கூர்ந்துள்ளார்.

நாள் ஒன்றுக்கு 40 கிலோ எடையுள்ள ஆயிரம் மூட்டைகள் மட்டும் கொள்முதல் செய்யப்பட்டு வருவதை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ள அவர், சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர முயற்சித்ததாக தெரிவித்துள்ளார்.

ஆனால், சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்ப்பு கொண்டு வர அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறிய அவர், அரசின் அலட்சியத்தால் பெரும் நஷ்டத்திற்கு தள்ளப்பட்டு விவசாயிகள் கடும் வேதனைக்கு ஆளாகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், இதுதொடர்பாக பல முறை தாம் கேள்வி எழுப்பிய போது, நெல் மூட்டைகள் கால தாமதமின்றி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் பதிலளித்ததையும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், இன்னும் பல நேரடி கொள்முதல் நிலையங்களில் உரிய ஆவணங்களோடு வரும் விவசாயிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு 15 நாட்களாகியும், கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

விவசாயிகள் என்ற போர்வையில் வரும் வியாபாரிகளின் நெல் மூட்டைகளை மட்டும் அதிகாரிகள் கொள்முதல் செய்வதாகவும், இதனால் விவசாயிகளின் நெல் மணிகள் மழையில் நனைந்து வீணவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட வையங்குடி, சாத்தநத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் இயக்கப்படாமல் இருப்பதையும் எதிர்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நெல் விளைச்சல் அதிகமுள்ள மாவட்டங்களில், மூடப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து கொள்முதல் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென்றும், சாக்குப் பை, தார்ப்பாய் உள்ளிட்டவைகள் போதியளவு இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்றும் தமிழக அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version