மருத்துவக் கல்வியிலும் அரசியல் செய்யும், மாணவர் விரோத திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் மூலம் ஆயிரத்து 650 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
முதற்கட்டமாக விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகை, நாமக்கல், திருப்பூர், ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மொத்தம் 850 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.
அதிமுக ஆட்சியின்போதே, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, அரியலூர், நாகை மாவட்ட மருத்துவக் கல்லூரிகளில் பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டுவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
எஞ்சியுள்ள சிறு பணிகளை முடிக்காமல் அவற்றை மறு ஆய்வு நிலைக்கு தள்ளியுள்ள திமுக அரசுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மருத்துவக் கல்வியிலும் மாணவர் விரோத திமுக அரசு அரசியல் செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் விமர்சித்துள்ளார்.
10 நாட்களுக்குள் எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடித்து, அந்தந்த மாவட்டங்களிலும் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.