ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழை, எளிய தொழிலாளர்களுக்கு சிறப்பு உணவுத் தொகுப்புடன், 2 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க வேண்டுமென, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முந்தைய அதிமுக அரசு, கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதையும், அதனால், கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், அப்போது ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த தினக்கூலி தொழிலாளர்கள், டாக்சி ஓட்டுநர்கள், பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு, விலையில்லா உணவுப் பொருட்களும், ரொக்க நிவாரண நிதியும் வழங்கப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, தினசரி கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளார்களுக்கு, கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டதைப் போல, எந்தவித நிவாரணமும் வழங்கப்படாததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இத்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், சிறப்பு உணவுத் தொகுப்புடன், 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் முதலமைச்சரை, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.