ஆக்சிஜன் கருவியை பிடிங்கியதால் நோயாளி துடிதுடித்து உயிரிழந்த சம்பவத்துக்கு, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

கடலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கருவியை பிடிங்கியதால் நோயாளி துடிதுடித்து உயிரிழந்த சம்பவத்துக்கு, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜா.

இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மே 5ஆம் தேதி முதல் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மூச்சுத்திணறல் காரணமாக, இவருக்கு ஆக்சிஜன் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மற்றொரு நோயாளிக்கு தேவைப்படுவதாக கூறி, ராஜாவுக்கு பொருத்தப்பட்ட ஆக்சிஜன் கருவியை, மருத்துவர்கள் பிடுங்கியதாக கூறப்படுகிறது.

ஆக்சிஜன் கருவியை அகற்ற வேண்டாமென ராஜாவின் மனைவி கயல்விழி மருத்துவர்களிடம் கெஞ்சியுள்ளார். ஆனால், மருத்துவர்கள் அதனை அலட்சியப்படுத்தி, ஆக்சிஜன் கருவியை பிடுங்கியதால், அடுத்த சில நிமிடங்களிலேயே ராஜா துடிதுடித்து உயிரிழந்தார்.

கண்ணெதிரே கணவர் உயிரிழந்த வேதனை தாளாமல், கயல்விழி கதறி அழுத காட்சிகள் காண்போர் நெஞ்சை உலுக்கியது.

இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூரில் துடிதுடித்து இறந்த கணவரை காப்பாற்ற முடியாமல் மனைவி கதறி அழுத காட்சிகளை பார்க்கும் போது நெஞ்சு பதைபதைக்கிறது என வேதனை தெரிவித்துள்ளார்.

இதுபோன்றொரு கொடூரமான சம்பவம் கடலூர் அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் இந்திய குற்றவியல் தண்டனை சட்டப் பிரிவின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இறந்தவர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version