ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்காதீர் – EPS

image

 

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சை நெற்களஞ்சியத்தை பாலைவனமாக்கும் பல திட்டங்களுக்கு வித்திட்டது தி.மு.க.வின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு என குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று, தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்க்கட்சித் தலைவர் பட்டியலிட்டுள்ளார்.

2016-ஆம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில், மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதா, டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர விவசாயப் பகுதிகளில் மீத்தேன் மற்றும் ஷேல் எரிவாயு திட்டங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என அறிவித்ததை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அறிவிப்பு, அதிமுக ஆட்சியில் முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்ததை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும் காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் சில டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு சட்டமன்றக் கூட்டத் தொடரில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கான தனிச் சட்டத்தை, அறிமுகம் செய்து நிறைவேற்றப்பட்தையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறு அமைக்க கூற்றுச்சூழல் துறை அனுமதி பெறும் வகையில், பொதுமக்களின் கருத்துக் கேட்பு தேவையில்லை என கடந்த ஆண்டு ஜனவரியில், திருத்தப்பட்ட அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டபோது, பொதுமக்களின் கருத்துக் கேட்புக்குப் பிறகே இதுபோன்ற திட்டங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, திருத்தப்பட்ட அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும் என பிரதமருக்கு, தாம் கடிதம் எழுதியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழ்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசுக்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கடிதம் எழுதியுள்ளதாக, செய்தி வெளிவந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டில் ஓஎன்ஜிசி நிறுவனமோ, இதர எண்ணெய் நிறுவனங்களோ புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கவில்லை என்பதை அவர் எடுத்துரைத்துள்ளார்.

இந்த நிலையில், அரியலூர் மாவட்டத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கோரி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தமிழ்நாடு அரசுக்கு எழுதிய கடிதத்திற்கு, அரசு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

 

Exit mobile version