இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு!!

இந்தியாவில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் தினமும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து செய்தி தொகுப்பை காணலாம்.

தற்போதைய சூழலில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வரும் நிலையில், எதிர்வரும் மாதங்களில் இதன் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என தொடக்கம் முதலே ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

அண்மையில், இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட London School of Hygiene and Tropical Medicine என்ற அமைப்பு, உலக மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரித்திருந்தது. அதாவது, உலகம் முழுவதும் சுமார் 170 கோடி பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படலாம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோன்ற ஆய்வை தற்போது,
அமெரிக்காவை சேர்ந்த Massachusetts என்ற நிறுவனமும் நடத்தியுள்ளது. உலக மக்கள்தொகையில் 60 சதவீதத்தை உள்ளடக்கிய 84 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த நாடுகளில் தற்போது மேற்கொள்ளப்படும் பரிசோதனை எண்ணிக்கை, அதன் முடிவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, அடுத்தாண்டு மார்ச் முதல் மே மாதம் வரை உலகம் முழுவதும் 20 கோடி முதல் 60 கோடி பேர் வரை கொரோனா பாதிக்கப்படுவார்கள் என ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக இந்தியாதான் அதிக பாதிப்புகளை சந்திக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தற்போது 7 லட்சத்திற்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே நிலை தொடர்ந்தால், அடுத்தாண்டு பிப்ரவரியில் தினந்தோறும் 2 லட்சத்து 87 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிக பாதிப்புகள் ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 95,000 பேரும், தென்னாப்பிரிக்காவில் 21,000 பேரும், ஈரானில் 17,000 பேரும் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படலாம் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது ஆய்வு நடத்தப்பட்ட 84 நாடுகளிலும் அடுத்தாண்டு கொரோனா பாதிப்பு 155 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த 84 நாடுகளும் பரிசோதனை எண்ணிக்கையை 0.1% என்ற அளவில் அதிகரித்தால், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 137 கோடியாக குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இந்தாண்டு ஜூன் 18ஆம் தேதி உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8.85 கோடியாகவும், இறப்பு எண்ணிக்கை 6 லட்சமாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த ஆய்வு முடிவு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அடுத்தாண்டு வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 155 கோடியாக உயரும் என்ற கணிப்பும் நிஜமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தவிர்க்க அனைத்து நாடுகளும் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும், நோய் பாதிப்பை தொடக்கத்திலேயே கண்டறிய வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். அவ்வாறு செய்ய தவறும்பட்சத்தில் நோய் பரவல் விகிதம் அதிகரிக்கும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

Exit mobile version