சென்னை தியாகராய நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்டுள்ள சாலைகள் மற்றும் நடைபாதை வளாகத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.
சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் 39.86 கோடி ரூபாய் மதிப்பில் நடைபாதை வளாகமும் 19.11 கோடி ரூபாய் மதிப்பில் சீர்மிகு சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி மணியை ஒலித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற கண்கவர் லேசர் நிகழ்ச்சியைப் பார்வையிட்டார். முதலமைச்சருடன், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அமைச்சர்கள், ஏராளமான பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னர் சீர்மிகு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் நடந்து சென்று முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து பேட்டரி காரில் பயணம் செய்து ஸ்மார்ட் பார்வையிட்டார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் மழைநீர் வடிகால், மின்சாரம், தொலைபேசி கட்டமைப்பு, புதை சாக்கடை குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடைபாதையின் சுற்றுச்சுவர் முழுவதும் வண்ண மிகு ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. மேலும் குழந்தைகளுக்கான பூங்கா, வண்ணமயமான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அண்ணாசாலை முதல் பாண்டிபஜார் வரை 14 இடங்களில் இலவச வைஃபை அமைக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உலகத் தரத்தில் தியாகராய நகர் பகுதி சீரமைக்கப்பட்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். தமிழகத்தில் 11 நகரங்களில் சீர்மிகு திட்டம் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.