மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் பலத்த பாதுகாப்புடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை 5 மணியளவில் திறக்கப்பட்டது. நேற்று பூஜைகள் எதுவும் நடத்தப்படாத நிலையில், இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு நெய்யபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பக்தர்கள் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு அனுப்பப்பட்டனர். இன்று அதிகாலையில் திரளான பக்தர்கள் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தனர்.
அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் கேரளாவின் பல பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. மறுசீராய்வு மனு மீதான தீர்ப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என இந்து அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 17ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை அடைக்கப்படும்.