வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின்கீழ், 573 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், அம்மா திருமண மண்டபம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில், சென்னை திருவொற்றியூரில் உள்ள நல்லதண்ணீர் ஓடைக்குப்பம் திட்டப் பகுதியில் 58 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 480 அடுக்குமாடிக் குடியிருப்புகளை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். மேலும், சென்னை கோயம்பேட்டில் 105 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு அலுவலகக் கட்டடம், 10 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபம் ஆகியவற்றையும் முதலமைச்சர் திறந்துவைத்தார்.
இதேபோல், சென்னை, நாமக்கல், ஈரோடு, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில், 399 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 ஆயிரத்து 748 அடுக்குமாடி குடியிருப்புகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதேபோன்று, உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் கடலூர், திண்டுக்கல், செங்கல்பட்டு, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில், சுமார் 14 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட காவலர் குடியிருப்புகள், காவல்நிலையங்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.