நகர்ப்புறங்களில் இன்று முதல் சலூன் கடைகள் திறப்பு!!!

சென்னையைத் தவிர, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் முடிதிருத்தும் கடைகள் இன்று முதல் இயங்க முதலமைச்சர் அனுமதியளித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரகப் பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் கடந்த 19ம் தேதி முதல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். இதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளைத் தவிர, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் பேரூராட்சிகளில் சலூன் மற்றும் அழகு நிலையங்கள் இன்று முதல் இயங்க அனுமதியளித்துள்ளார். தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும் செயல்படலாம் என்றும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் சலூன் கடைகள் இயங்க அனுமதி கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார். தடை செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் தொழிலாளர்களை பணியமர்த்தக் கூடாது என்றும், பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கிருமிநாசினி வழங்குவதையும், முககவசங்கள் அணிவதையும் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்களில் ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றும் குளிர்சாதன வசதி இருப்பின் அதை கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version