ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலா 36 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளிக் கட்டடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதேபோன்று, சென்னை, நெல்லை, மதுரை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில், 15 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 விடுதிக் கட்டடங்கள், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான கட்டடங்கள், அறிவியல் ஆய்வகக் கூடங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் பணியில் இருக்கும் போது காலமான 21 அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 16 பேருக்கு இளநிலை உதவியாளர் பணியிடங்களும், 5 பேருக்கு தட்டச்சர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக, 7 வாரிசுதாரர்களுக்கு பணி ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், வணிக வரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் ராஜலெட்சுமி, தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்ட கோயம்புத்தூர் லூம்வேர்ல்டு விற்பனை நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்திற்கு சொந்தமான மதுரை, மேலமாசி வீதியிலுள்ள காதி கிராப்ட் கட்டடத்தை 80 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்து, நவீனமயமாக்கப்பட்ட “காதி மார்ட்” கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சர் பாஸ்கரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.