திருவாரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில், சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நூலகம் மற்றும் புதிய கட்டடங்களின் திறப்பு விழா நடைபெற்றது.
நீலகுடியில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்தில், உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட புதிய நூலகம் மற்றும் கட்டடங்களை, பல்கலைக்கழகத்தின் வேந்தர் பத்மநாபன் திறந்து வைத்தார். மூன்று அடுக்குமாடிகளுடன், 8 ஆயிரத்து 572 சதுர மீட்டர் பரப்பளவில் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதில், 46 ஆசிரியர் அறைகள், 30 வகுப்பறைகள், கருத்தரங்குக் கூடம் மற்றும் 12 ஆய்வகங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், 5 ஆயிரத்து 982 சதுர மீட்டர் பரப்பளவில், 17 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மத்திய நூலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. புதிய கட்டடங்களின் திறப்பு விழா நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் 10-ஆம் ஆண்டு புத்தகம் வெளியிடப்பட்டது.