ஒரு நாள் மட்டும் ஆஸ்திரேலியாவின் உயர் தூதராக பதவி வகித்த பழங்குடி பெண்ணான பாரி சிங்கிற்கு அவரது கிராமத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த பழங்குடி இன இளம் பெண் பாரி சிங். நக்ஸல்களின் ஆதிக்கம் மிகுந்த அவரது கிராமத்தில் பெண் குழந்தைகளின் கல்வி, சமத்துவம், ஆகியவற்றிக்கு சேவையாற்றியதன் மூலம், பல்வேறு தரப்புகளிடமிருந்து பாராட்டுக்களை பெற்றதுடன் ஊடகங்களின் கவனம் ஈர்த்தார்.
மத்திய அரசானது சிறந்த முறையில் சமூக சேவையாற்றியவர்களை டெல்லியில் உள்ள 17 நாடுகளின் உயர் தூதர்களாக ஒரு நாள் மட்டும் பதவியில் அமர்த்தி கவுரவப்படுத்தியது. அந்த வகையில் ஜாம்ஷெட் பூரின் பாரி சிங் என்பவர் ஆஸ்திரேலியாவின் உயர் தூதரக அதிகாரியாக பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பணி முடிந்து தனது கிராமத்திற்கு திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பதவி வகித்த முதல் பழங்குடி இனப்பெண் பாரி சிங் என்பது குறிப்பிடத்தக்கது.