கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக, சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், இன்று முதல் வரும் ஏப்ரல் முதல் வாரம் முடியும் வரை, அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளோடு வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடினார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தில் உள்ள மூத்த நீதிபதிகள், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண்,வழக்கறிஞர் சங்கங்களின் தலைவர்கள், தமிழக அரசின் தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து, தலைமை நீதிபதி உத்தரவின்படி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ,கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை உட்பட தமிழகம் முழுதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று முதல் வரும் ஏப்ரல் முதல் வாரம் முடியும் வரை அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.