சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க, கொரோனா அறிகுறிகள் தீவிரமாக இருந்தால் மட்டும் அரசு பொது மருத்துவமனைகளுக்கு செல்லுமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தில் கொரோனா பரிசோதனை மையத்தை மாநகராட்சி ஆணையர் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா உறுதி செய்யப்பட்ட நபருக்கு அறிகுறி இல்லை என்றால், மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்துவிட்டு, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
லேசான அறிகுறிகள் இருப்பவர்கள் அரசு பொது மருத்துவமனைகளை நோக்கி செல்வதால், தீவிர அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வீட்டின் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கொரோனா முகாம்களுக்கு சென்று முதற்கட்ட சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினார்.
லேசான அறிகுறி இருப்பவர்கள் மாநகராட்சி உதவி மையத்தை தொடர்பு கொண்டால் உரிய உதவிகள் வழங்கப்படும் என்று கூறினார்.
சென்னையில் தினமும் சுமார் 20 ஆயிரம் நபர்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்படும் நிலையில் அதனை 25 ஆயிரமாக உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.