கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மலை மீது ஏற 2,500 பேருக்கு மட்டும் அனுமதி

கார்த்திகை தீபத்தின்போது திருவண்ணாமலை மலை மீது ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வரும் 10ஆம் தேதி காலை 6 மணிக்கு, செங்கம் சாலையில் உள்ள சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப் பள்ளியில், சிறப்பு மையம் திறக்கப்பட்டு, 2,500  பக்தர்களுக்கு மட்டும் அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதி சீட்டு வழங்கப்படும் என்றும், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களின் நகலை சமர்ப்பித்து, அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மலை மீது ஏறும் பக்தர்கள், தண்ணீர் பாட்டில் மட்டும் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும், மலையில் இருந்து இறங்கி வரும்போது, காலி தண்ணீர் பாட்டில்களை திரும்பக் கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Exit mobile version