வெங்காய விலையைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம்

வெங்காயத்தைப் பதுக்கி வைப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வெளிமாநிலங்களில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்வது குறித்து ஓரிரு நாட்களில் முடிவெடுக்கப்படும் எனவும் கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜு, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பருவந்தவறிப் பெய்த மழையால் வெங்காயப் பயிர்கள் அழுகிப் போய்விட்டதால் சந்தைக்கு வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக வெங்காயம் நிலை உயர்ந்து வரும் நிலையில், தமிழகத்துக்குத் தேவையான வெங்காயத்தை வெளிமாநிலங்களில் இருந்து வாங்கி விலையைக் கட்டுக்குள் வைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை, உணவுத்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, மாவட்டந்தோறும் அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டதால் நேற்றைவிட இன்று வெங்காய விலை கிலோவுக்கு 4 ரூபாய் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

Exit mobile version