வெங்காய விலையைக் கட்டுப்படுத்த ஆப்கானிஸ்தான், ஈரான், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை ஓய்ந்த பின்னும் நாட்டின் பல மாநிலங்களில் பருவந் தவறிப் பலத்த மழை பெய்தது. இதனால் வயல்களில் நீர்தேங்கிப் பயிர்கள் அழுகியதால் சந்தைக்கு வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் வட மாநிலங்களில் ஒரு கிலோ வெங்காயம் எண்பது ரூபாய் வரை விற்கப்படுகிறது. அடுத்த சில நாட்களில் 120 ரூபாய் வரை விலை உயரக்கூடும் எனவும் வணிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வெங்காய விலையைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்குத் தட்டுப்பாடின்றிக் கிடைக்கவும் வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், ஈரான், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெங்காய இறக்குமதிக்குத் தேவையான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்யும். முதற்கட்டமாக 100 சரக்குப் பெட்டகங்களில் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட உள்ளது. இந்த வெங்காயம், தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைக் கூட்டமைப்பு மூலம் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு நேரடியாக விற்கப்படும்.