தமிழகத்தில் “ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம்” நாளை அமலுக்கு வரும் நிலையில், ரேசன் கடைகளுக்கு கூடுதலாக 5 சதவீத பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் “ஒரே நாடு ஒரே ரேசன்” திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை துவக்கி வைக்கிறார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், “ஒரே நாடு ஒரே ரேசன்” திட்டம் மூலம், தமிழகத்தில் எந்த இடத்தில் வசித்தாலும் அருகில் உள்ள ரேசன் கடைக்கு சென்று பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
ரேசன் கடைகளில் பயோமெட்ரிக் முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனக் கூறிய அமைச்சர், ரேசன் கடைகளுக்கு 5 சதவீத பொருட்கள் கூடுதலாக விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் எந்த இடத்தில் வசித்தாலும் அருகில் உள்ள ரேசன் கடைக்கு சென்று பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும், ரேசன் கடைகளில் பொருட்களை பெற முடியவில்லை என்ற நிலை இனி இருக்காது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.