வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வடமாநிலங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால், வரத்து குறைந்து வெங்காய விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சந்தைகளில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால், சாமான்ய மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இந்த நிலையில், வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எம்எம்டிசி எனப்படும் இந்திய உலோகங்கள் மற்றும் கனிமங்கள் வர்த்தக நிறுவனம் வெங்காயத்தை இறக்குமதி செய்து, உள்நாட்டு சந்தைகளில் வருகிற 15 ஆம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.