ஈரோட்டில் தனியார் நிதி வசூல் மையத்தின் பீரோவில் இருந்த, 1 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் மடிக்கணினிகளை கொள்ளை அடித்த கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் அன்புச்செல்வன். அவரது நண்பர் பெயர் கார்த்திக்ராஜா. இவர்கள் இருவரும் இணைந்து ஈரோடு பிரப் ரோடு வாசுகி வீதியில் தனியார் வங்கிகளில் லோன் வாங்கியவர்களிடம் பணம் வசூலிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இவர்களது நிறுவனத்தில், இவர்களுக்கு தெரிந்த பவானி காளிங்கராயன்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு மேனஜராக பணிக்கு சேர்ந்தார். மணிகண்டன், நிறுவனத்தின் உரிமையாளர் அன்புச்செல்வனிடம் ரூ.2லட்சம் கடனாக வாங்கி, ஒரு வாரத்தில் திருப்பி தருவதாக கூறி உள்ளார். ஆனால் மணிகண்டன் ஒரு லட்சம் ரூபாயை 3 நாட்களுக்கு முன்பு செலுத்தி உள்ளார்.
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு அன்புச்செல்வன் மற்றும் கார்த்திக்ராஜா ஆகிய இருவரும் அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது, வாடிக்கையாளர்களிடம் வசூலித்து பீரோவில் வைக்கப்பட்டிருந்தcரூ.1லட்சத்து 4ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்தபோது, மேனேஜர் மணிகண்டன் மற்றும் அவருடன் ஹெல்மெட் அணிந்தபடி மற்றொரு நபர் இருவரும் உள்ளே வருவதும், பின்னர் பீரோவை உடைத்து உள்ளே இருந்த பணம் மற்றும் லேப்டாப்புகளை திருடி சென்றது தெளிவாக பதிவானது.இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் அன்புச்செல்வன் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், மணிகண்டனை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.