எம்.இ, எம்.டெக், எம்.பி.ஏ, எம்.சி.ஏ உள்ளிட்ட முதுநிலைப் படிப்புகளுக்கு, அண்ணா பல்கலைகழகம் ஒரே நுழைவுத் தேர்வினை நடத்தும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளுக்கு மட்டும் ஏ.யு.செட் என்ற பெயரில் தனியாக நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என சமீபத்தில் துணை வேந்தர் அறிவித்திருந்தார். இதனால் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தனியாகவும், தமிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு தனியாகவும், நுழைவுத் தேர்வினை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால், மாணவர்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, டான்செட் என்ற பெயரில் ஒரே நுழைவுத் தேர்வினை எழுதுவதற்குரிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முதுநிலைப் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கைக்காக, அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
குழுவின் உறுப்பினர்களாக, தொழில்நுட்ப கல்வி இயக்குநர், கல்லூரி கல்வி இயக்குநர், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், மாணவர் சேர்க்கை மையத்தின் இயக்குநர், துணை இயக்குனர், கல்வி பாடத் திட்ட மையத்தின் இயக்குநர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ஆகியோர் செயல்படுவார்கள்.