முதல்வர் நிவாரண நிதிக்கு காவல்துறையினர் வழங்கிய ஒரு நாள் சம்பளம் திருப்பி தரப்படும்!

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, காவல்துறையினர் வழங்கிய ஒருநாள் சம்பளம், திருப்பி அனுப்பப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசுக்கு உதவிடும் வகையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியம் அல்லது அதற்கும் மேலான தொகையை தானாக முன் வந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, காவலர்கள் உள்ளிட்டோர் தங்களது ஒரு நாள் ஊதியத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணியில் காவல்துறையினர் ஓய்வில்லாமலும், அர்பணிப்போடும் பணியாற்றி வருவதால் அவர்கள் அளித்திருந்த 8 கோடியே 41 லட்சத்து 37 ஆயிரத்து 286 ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து திருப்பி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை சம்பந்தப்பட்ட காவலரின் கணக்கில் திருப்பி சேர்க்கப்பட்டு விட்டதா? என டிஜிபி உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version