ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
நேர விரயம், பண செலவு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சட்டப்பேரவைகள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என மத்திய பாஜக அரசு கோரி வருகிறது. இதுகுறித்து கடந்த தேர்தலின்போதே கோரிக்கை எழுந்தபோதிலும் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. இதனிடையே சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக மீண்டும் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதை தொடர்ந்து ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை செயல்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒருபகுதியாக காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்புவிடுத்தது. இன்று டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரம் குறித்து அரசியல் தலைவர்கள் ஆலோசிக்க உள்ளனர். இதில் அதிமுக சார்பாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தை திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். அதேசமயம் காங்கிரஸ் தனது நிலைப்பாடு குறித்து ஏதும் அறிவிக்கவில்லை.