கோவையில் பைக் விற்பதாக கூறி 30 ஆயிரம் ரூபாயை நூதனமாக பறித்து சென்ற OLX திருடனை பாதிக்கப்பட்டவரே திட்டம் தீட்டி போலீசில் பிடித்து கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் விக்ரம். 19 வயதாகும் இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். செகண்ட் ஹேண்ட் பைக் வாங்குவதற்காக OLX ஆப்பில் தகவல் தேடியுள்ளார். அப்போது லட்சுமணக் குமார் என்பவர் சொகுசு பைக் விற்பனைக்கு இருப்பதாக விளம்பரம் வெளியிட்டிருந்தார்.
அதில் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது பைக் உரிமையாளர், 50 ஆயிரம் ரூபாய்க்கு பைக் தருவதாக கூறியுள்ளார். ஒன்றரை லட்சம் மதிப்புள்ளை பைக் 50 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறதே என நினைத்த விக்ரம், லட்சுமண குமாரை பைக் மற்றும் ஆவணங்களுடன் அவிநாசி சாலையில் உள்ள அண்ணாசிலை அருகே வர சொல்லியுள்ளார்.
அதன்படி கடந்த மாதம் 21 ம் தேதி லட்சுமணகுமார் பைக்குடன் அங்கே வந்தார். அப்போது விக்ரம் 30 ஆயிரம் ரூபாயை முன்பணமாக கொடுத்து விட்டு மீதத் தொகையை மாதத்தவணையின் தருவதாக கூறியுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்து பணத்தை பெற்று கொண்ட லட்சுமணகுமார், இது தனக்கு ராசியான பைக் என்றும் எனவே கடைசியாக ஒரு ரவுண்டு போய் விட்டு வருவதாகவும் கண் கலங்க கூறியுள்ளார்.
அவரின் பேச்சை நம்பி பணம் மற்றும் பைக்குடன் லட்சுமணகுமாரை வழி அனுப்பி வைத்துவிட்டு வழிமேல் விழி வைத்து காத்திருந்துள்ளார் விக்ரம். ஆனால் போனவர் போனவர்தான். திரும்பவே இல்லை. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விக்ரம், போலீசில் புகார் அளித்தால் வீட்டிற்கு விஷயம் தெரிந்து விடும் என எண்ணி மனதிற்குள் வைத்தே புழுங்கி தவித்துள்ளார்.
அதே பைக் மீண்டும் விற்பனைக்கு உள்ளதாக அதே ஆப்பில் விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தது. இதைப் பார்த்த விக்ரம், தனது நண்பர் ஒருவர் மூலமாக பைக் வாங்க விருப்பம் இருப்பதாக கூறி, லட்சுமண குமாரை தொடர்பு கொண்டு பேச வைத்துள்ளார்.
அடுத்த ரவுண்டுக்கு ஆடு ரெடியாகி விட்டதாக எண்ணி பணத்தோடு ஸ்பாட்டிற்கு வந்து விடுங்கள் என கூறி பைக்குடன் வந்துள்ளார் லட்சுமணகுமார். அவரது வரவை எதிர்பார்த்து காத்திருந்த விக்ரமும் அவரது நண்பர்களும் பைக் மோசடி மன்னனை மடக்கி பிடித்து போலிசில் ஒப்படைத்தனர். விசாரணையில் ஒரே பைக்கை வைத்து லட்சுமண குமார் பலரிடம் பணத்தை சுருட்டியது தெரியவந்தது.
கையாடல் செய்த பணத்தை கொண்டு கார் வாங்கி காதலிகளோடு ரெய்டு போனதும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். விக்ரம் தவிர வேறு யாரிடம் எல்லாம் லட்சுமண குமார் தனது கைவரிசை காட்டியுள்ளார் என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்