தேசிய ஜனநாயக கூட்டணி 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்கும் என தேசிய ஊடகங்கள் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளன.
17-வது மக்களவைத் தேர்தலையொட்டி, நாடு முழுவதும் உள்ள 542 தொகுதிகளில் 7 கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகளை தேசிய ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
ரிபப்ளிக் தொலைக்காட்சி மற்றும் ஜன்கிபாத் நடத்திய கருத்து கணிப்பு முடிவில் பாஜக கூட்டணி 287 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 128 இடங்களிலும், மற்ற கட்சிகள் 127 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் கூறியுள்ளது.
டைம்ஸ் நவ் மற்றும் சி.என்.எக்ஸ் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளில், பாஜக கூட்டணி 306 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 132 இடங்களிலும், மற்ற கட்சிகள் 104 தொகுதிகளைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நியூஸ் எக்ஸ் மற்றும் இந்தியா நியூஸ் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளின்படி, பாஜக கூட்டணி 298 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 118 இடங்களிலும், இதர கட்சிகள் 126 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்.டி.டிவி வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 302 தொகுதிகளிலும், காங்கிரஸ் 132 இடங்களிலும் மற்றவை 104 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.
நியூஸ் நேசன் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் பாஜக 286 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 122 இடங்களிலும், மற்றவை 132 இடங்களைக் கைப்பற்றும் என்றும் வெளியிட்டுள்ளது.