கார்கில் போரில் வீர மரணமடைந்த மேஜர் சரவணனின் புதுப்பிக்கப்பட்ட நினைவுத் தூணில் அதிமுக அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள கார்கில் எனும் இடத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி அடைந்தது. இந்தப் போரில் திருச்சியைச் சேர்ந்த மேஜர் சரவணன் வீரமரணம் அடைந்தார். இதை நினைவு கூரும் வகையில் திருச்சியில் தனியார் பள்ளி மைதானம் அருகே உள்ள ரவுண்டானாவில் அவருக்கு நினைவுத் தூண் அமைக்கப்பட்டு உள்ளது. 20ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இந்தத் தூண் 8 லட்சத்து 25ஆயிரம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. மேஜர் சரவணன் அறக்கட்டளை சார்பில் புதுப்பிக்கப்பட்ட இந்தத் தூணிற்கு மரியாதை செலுத்தும் விதமாக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் கார்த்திகேயன், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.