ஜவுளி வாங்கியதில் ரூ.4.55 கோடி மோசடி செய்த திமுக பிரமுகர் கைது

ஜவுளி வாங்கியதில் ரூ.4.55 கோடி மோசடி செய்த வழக்கில், திமுக இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் உள்ளிட்ட மூவரை ஈரோடு குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஈரோடு ஜெகநாதபுரத்தைச் சேர்ந்தவர் கோகுலகண்ணன். காடா துணி, வேட்டி உற்பத்தி மற்றும் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் ஈரோடு மாநகர திமுக இளைஞரணி அமைப்பாளராக பதவி வகித்துவந்த கோட்டை ராமு, கடந்த ஆண்டு கோகுல கண்ணனை அணுகி, தான் ஜவுளித்தொழில் செய்து வருவதாகவும், தனது மனைவி, மகன் ஆகியோர் பங்குதாரர்களாக தொழிலில் உள்ளதாகவும் தெரிவித்து. கடந்த 2018 நவம்பர் மாதம்17 ஆம் தேதி முதல் 2019 ஏப்.26 வரை பல்வேறு தேதிகளில் மொத்தம் ரூ.4.55 கோடி மதிப்புக்கு காடா துணியை பெற்றுச் சென்றார்.

திமுக பிரமுகர் கோட்டை ராமு வாங்கி சென்ற கோடிக்கணக்கான மதிப்புள்ள காடா துணிக்கான பணத்தை கோகுல கண்ணன் திருப்பி கேட்டபோதெல்லாம் மீண்டும் சரக்கு அனுப்பினால் பணம் தருவதாக தெரிவித்திருக்கிறார். மோசடி பேர்வழி என்று தெரியாமல் திமுக பிரமுகர் கோட்டை ராமு கேட்டபோதெல்லாம் மீண்டும் பலமுறை சரக்குகளை அனுப்பி வைத்திருக்கிறார்.

அதற்கு பின்பு மீண்டும் மீண்டும் பணத்தை பலமுறை கேட்டும் பலனில்லை. கடந்த 2019 ஆக.26-ல் கோட்டை ராமு வீட்டிற்கே சென்று பணத்தை கேட்டிருக்கிறார். ஆனால் கோட்டை ராமு மகன், மனைவி, உறவினர்கள் உடன் வைத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. கோடிக்கணக்கில் பணத்தையும் அபகரித்துக்கொண்டு கொலை மிரட்டலும் விடுகின்ற திமுக பிரமுகர் கோட்டை ராமுவை ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

அந்த புகாரை தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கோட்டை ராமு, அவரது மகன் அருண் குமார், தங்கராஜன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். கோட்டை ராமுவின் மனைவி மணிமேகலை, மல்லிகா, கார்த்திகா, தேவேந்திர குமார், ராஜேஷ், ஆனந்த், வேலுமணி ஆகிய 7 பேரை தேடி வருகின்றனர்.

கோட்டை ராமு கைதானதை அடுத்து, ஈரோடு மாநகர இளைஞரணி அமைப்பாளர் பதவியில் இருந்து திமுக தலைமை அவரை நீக்கி, புதிய நிர்வாகியை அறிவித்துள்ளது. கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, மிரட்டல், ஆள்கடத்தல், லஞ்சம், வழிப்பறி, பணம் பறிப்பு என்று குற்றவாளிகளின் கூடாரமாக திமுக திகழ்கிறது என்று கூறுகின்றனர் விபரம் தெரிந்தவர்கள்.

Exit mobile version